பெரம்பலூர் மறை வட்டப் பகுதியில் 02.02.1965 ஆம் ஆண்டு அருட்திரு. எம். எஸ். மரியதாஸ் அடிகளார் பெரம்பலூர் பங்கின் குருவாக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் பெரம்பலூர் பங்கில் கத்தோலிக்கச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 18.12.1966 ஆம் ஆண்டு கத்தோலிக்கச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 26.02.1967 ஆம் ஆண்டு கத்தோலிக்க இலக்கிய விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இதனை அப்போது குருவாக இருந்த அருட்திரு. எம். எஸ். மரியதாஸ் அடிகளார் சிறப்பாக நடத்தினார். அவருடன் கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் ஆசிரியர் சவரிமுத்து அவர்களும், கத்தோலிக்க சங்கத்தின் செயலாளர் பாளையம் ஆசிரியர் பால்தாஸ் அவர்களும் இவர்களுடன் கவிஞர் அமலன் அவர்களும் இணைந்து கத்தோலிக்க இலக்கிய விழாவினை பங்குத்தந்தையுடன் இணைந்து சிறப்பாக நடத்தினர்.
1975 ஆம் ஆண்டு ஆசிரியர் அப்பாதுரை அவர்கள் தலைவராகவும், ஆசிரியர் சிங்கராயர் அவர்கள் செயலாளர் ஆகவும் இருந்து கத்தோலிக்கச் சங்கத்தினை நல் முறையில் வழிநடத்தினார்கள். கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்கள் ஆன்மீகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பனிமயமாதாவிற்கும், பெரம்பலூர் பங்கின் ஆலயப் பணிக்கும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
1991 ஆம் ஆண்டு கத்தோலிக்க சங்கம் மறுமலர்ச்சிப் பெற்று புதுப்பொலிவுடன் அதன் செயல்பாடுகள் சீரும் சிறப்பு மிக்கதாகவும் விளங்கியது. இன்றுவரை சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது பெரம்பலூர் பங்கின் கத்தோலிக்கச் சங்கத்தின் தலைவராக திரு சி. பீட்டர் ராஜ் அவர்களும், துணைத் தலைவராக திரு எம். மகிமை தாஸ் அவர்களும், செயலாளராக திரு. அகரம் திரவியராஜ் அவர்களும், துணைச் செயலாளராக திரு. டி. ரவிசித்தார்த்தன் அவர்களும், இணைச் செயலாளராக திரு எ. பிச்சைமுத்து அவர்களும், பொருளாளராக திரு டி. ஜோசப் அவர்களும் இன்றுவரை சீரும் சிறப்புமாக கத்தோலிக்கச் சங்கத்தினை வழிநடத்தி வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை நமது பெரம்பலூர் பங்கைச் சேர்ந்த திரு. ரெனோ பாஸ்டின் அவர்கள் பெரம்பலூர் மறைவட்ட கத்தோலிக்க சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் கத்தோலிக்கச் சங்க மாநில சிறுபான்மை நலத்துறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் நமது பெரம்பலூர் பங்கைச் சேர்ந்த திரு. டி. தைரியம் அவர்கள் பெரம்பலூர் மறைவட்ட கத்தோலிக்க சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
பெரம்பலூர் மறைவட்ட பகுதியில் கத்தோலிக்க சங்கமானது தலித் விடுதலை இயக்கங்களின் போராட்டங்களில் அதிக அளவு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. மற்றும் அதிக அளவு அரசியல் முன்னேற்பாடுகளில் தங்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. மத நல்லிணக்கத்திற்காக அயராது பாடுபட்டும் வருகிறது. இலவச கண் சிகிச்சை முகாம்கள் பலவும் சிறப்பாக நடத்தியுள்ளது. கத்தோலிக்கச் சங்கத்தின் செயலாளர் திரு. அகரம் திரவியராஜ் அவர்கள் எழுதிய நூல் "கிறிஸ்துமஸ் விழாவும் பல்சமய உரையாடல்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு. ராஜேஷ் லகானி பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
"NBCLC" தேசிய விவிலிய கத்தோலிக்க சென்டரினால் பயிற்றுவிக்கப்படும் பயிற்சி பட்டறையில் இங்குள்ள கத்தோலிக்கச் சங்கத்தினர் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மறைவட்ட பகுதியில் கத்தோலிக்க சங்கத்தினரின் அரசியல் சார்ந்த பங்களிப்பு மிகவும் சிறப்பு மிக்கதாக திகழ்ந்து வருகிறது.