1943 ல் பெரம்பலூர் பங்கின் முதல் குருவானவர் என்ற பெருமைக்குரியவர் அருட்திரு. எம். ரோச்மாணிக்கம் அடிகளார். இவர் பணியாற்றிய காலங்களில் பாளையம் பங்கின் உதவி குருவாகவே திகழ்ந்தார். இவர் திருப்பலிக்குத் தேவையான அருட்சாதனங்களை தயாரித்து வைத்தார். ஞாயிறு தோறும் திருமணி ஆராதனை சிறப்புற நடைபெறச் செய்தார். இவர் ஓர் ஆண்டு பெரம்பலூர் பங்கில் பணியாற்றினார். பின்னர் வடுகர்பேட்டை பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து அருட்திரு. சி. இருதயம்பால் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு குருவாக வந்தார். இவரே பெரம்பலூர் பங்கின் முதல் குரு என்ற பெருமைக்கு உரியவர். சிறிய அமைப்பில் இருந்த பனி மாதா கோயிலை விரிவுப்படுத்தினார். கட்டிடங்களைச் செப்பம் செய்தார். செங்கல் தரையை சிமெண்ட் பூசி திருத்தினார். பின்னர் பெரம்பலூர் பங்கிற்கு என்று கிணறு தோண்டி தண்ணீர் வசதி செய்தார். பங்கு மக்களின் உதவியுடன் அவர்கள் அளித்த அன்பளிப்பு தொகையால் திருப்பலிக்குத் தேவையான அருட்சாதனங்கள் வாங்கி வைத்தார். பின்னர் மே மாதத்தில் நடைபெற்ற பனிமாதா திருவிழாவினை உரிய நாளில் ஆகஸ்ட்த்திங்கள் ஐந்தாம் நாள் நடைபெறச் செய்தார். இவர் ஓர் ஆண்டு பெரம்பலூர் பங்கில் பணியாற்றி பின்பு 1945 ஆம் வருடம் புதுமை தவழும் பூண்டி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.
இவரைத் தொடர்ந்து பெரம்பலூர் பங்கிற்கு அருட்திரு. ஏ. பி. ஆரோக்கியசாமி அடிகளார் குருவாக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு தத்துவஞானி. இவர் சிறந்த சொற்பொழிவாளர். அரசு கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் நடைபெறும் அரசு விழாக்களிலும் சீர்சால் சிறப்புரையாற்றும் சீலர். நல்ல இசைவாணர் இவர் பீடத்தைச் சிறப்பாக அழகுப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்.
இவர் அருட்திரு இருதயம்பால் அடிகளார் தோன்றியிருந்த கிணற்றிற்குக் கைப்பிடிச்சுவர் அமைத்தார். இவர் மரப்பலகையால் பீடம் ஒன்று அமைத்து திருப்பலி உடுப்புகளை வைத்துக் கொள்வதற்கு ஏற்ப வசதிகளைச் செய்தார். இன்றும் நம் ஆலயத்தில் அப்பீடம் காணலாம். இவர் நமது பங்கில் ஒன்றரை வருடம் பணியாற்றினார். பின்னர் குலமாணிக்கம் பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.
இவரைத் தொடர்ந்து பெரம்பலூர் பங்கிற்கு அருட்திரு. பி. மதலைநாதர் அடிகளார் 1946 ஆம் ஆண்டு பெரம்பலூர் பங்கிற்கு குருவாக வந்தார். இவர் இந்து மக்களிடம் அளவற்ற அன்பு காட்டினார். ஏழை எளிய மாணவர்களைக் கல்வி கற்க வைத்தார். பெரம்பலூரில் இருந்து இறைப்பணி புரிய நால்வரை குடந்தை குரு பள்ளியில் சேர்த்தார். பின்னர் பெரம்பலூரில் முதல் கூட்டுறவு பால் பண்ணை ஏற்படுத்தக் காரணமாய் இருந்தார்.
இவர் கோயிலுக்குத் தென்கிழக்கு புறத்தில் இரண்டு குடியிருப்பு வீடுகளும், ஐந்து கடைகளும் கட்டி வருவாய் பெருக வழிவகை செய்தார். அரசு கைப்பற்ற நினைத்த ஆலய இடத்தை அறமன்றம் சென்று அன்னையின் அருளால் ஆலயத்திற்கே உரிமை உடைய தாக்கிய பெருமை இவரையே சாரும். தான் ஏற்படுத்திய கூட்டுறவு பால் பண்ணைக்கு அரசு இவரையே தலைவர் ஆக்கியது. இவர் பெரம்பலூர் பங்கில் ஆறு ஆண்டுகள் வரை பணியாற்றி 1952 ஆம் ஆண்டு பெரியவர்சீலி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.
புள்ளம்பாடி பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு. எம். ஆர். குழந்தைநாதன் அடிகளார், 03.10.1952 ஆம் ஆண்டு பெரம்பலூர் பங்கிற்கு 5ஆவது குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் தந்தை இந்துவாக இருந்து, பன்னிரு வயதில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார். இவர் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் சமம் செய்து சீர்திருத்தம் செய்தார். அந்நாட்களில் கோயிலுக்கு மேல்புறம் திறந்த வெளியை முட் கம்பி வேலியால் பாதுகாத்தார். இவர் நமது பெரம்பலூர் பங்கில் நான்கு ஆண்டு காலம் பணியாற்றி பின்னர் காட்டூர் பங்கிற்கு 27.09.1956 ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார்.
அவருக்குப் பின் பெரம்பலூர் பங்கிற்கு 27.09.1956 ஆம் ஆண்டு அருட்திரு. எம். எஸ். அந்தோணி அடிகளார் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவர் அயரா உழைப்பாளர். பங்கின் முன்னேற்றத்திற்கு மிகவும் பாடுபட்டவர். மக்கள் அனைவரையும் வேறுபாடு கருதாமல் ஒத்த உடன்பிறப்பாய் வாழ வகை செய்தார்.
திரு பாலத்துவசபை ஏற்படுத்தி திருவிழாக் கண்டார். சிறுவாச்சூரில் கத்தோலிக்க சலவை தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் கிடைக்க உதவினார். இவரது காலத்தில் தான் கோயிலுக்கு மின் வசதி கொடுக்கப்பட்டது. கோயிலுக்கு வடபுறம் உள்ள எட்டு குடியிருப்பு இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். பின்னர் கூடுதலாக பாளையம் பங்கையும் ஓராண்டு கவனிக்கும் பொறுப்பு இவருக்கு ஏற்பட்டது. பாளையம் பங்கின் குறைபாடுகளைச் சரி செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளும் கட்டிடப் பணிகளும் இவருக்கு நிறைந்த கவலையை உண்டாக்கின. மனவுளைச்சல் மிகவே உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டார். இவரது அயரா உழைப்பு அரும்பையன் விளையாததால் 1958 ஆம் ஆண்டு விருப்ப மாற்றல் பெற்று காட்டூர் பங்கின் பொறுப்பினை ஏற்றார்.
இவரைத் தொடர்ந்து அருட்திரு சி எஸ் துரைசாமி நாதர் அடிகளார் களத்தில் வென்றான் பேட்டை பங்கினின்று 15.07.1958 ல் பெரம்பலூர் பங்கின் பங்கு குருவாக பொறுப்பேற்றார். இவர் பெரம்பலூர் பங்கு வரலாற்றில் முக்கியமானவர். பிறர் நலம் பேணிய போற்றியாலர். பெரம்பலூர் பங்கின் இன்றைய சீர்சால் சிறப்பிற்கு வித்திட்டவர். 24.10.1960 ஆம் ஆண்டு அரும்பாடு பட்டு புனித தோமினிக் கன்னியர் இல்லம் ஏற்படுத்தினார். அப்பொழுது தூய பாத்திமா தொடக்கப்பள்ளியும் தொடங்கப்பட்டது. அருட்தந்தை அவர்கள் தான் தங்கியிருந்த தன் இல்லத்தையே கன்னியர் தங்க மனமுவந்து ஈந்தார். பின்பு அருட்திரு. எம். எஸ். அந்தோணி அடிகள் அடிக்கல் நாட்டிய 8 குடியிருப்பு இல்ல பணிகளையும் இனிதே முடித்தார். புதிய கோயில் கட்ட 27.11.1961 அன்று முன்னாள் ஆயர் அருட்பெருந்திரு. டி. பால் அருள்சாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆலயத்தைக் கட்டி முடித்தார். இவர் நான்கு ஆண்டுகள் பெரம்பலூர் பங்கில் பணியாற்றி 10.05.1962 ஆம் ஆண்டு பணி மாற்றலாகி சென்றார்.
இவரைத் தொடர்ந்து மே மாதம் 1962 ஆம் ஆண்டு அருட்திரு. எஸ். அந்தோணிசாமி அடிகள் பெரம்பலூர் பங்கிற்கு பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். இவர் அன்னை பனிமயத்தாய் ஆலய நற்பணியை முற்றுவித்த பெருமை இவருக்கு உண்டு; இவர் சிறந்த பண்பாளர். சிறப்பாக ஆன்மீக அருள் வழங்கும் நெறியாளர்.
இவர் 23.07.1962 ஆம் ஆண்டு அழகிய குருவின் இல்லத்தை முதன்மை குரு அருட்திரு அந்தோணி ஜோசப் அடிகளாருடன் முன்னாள் ஆயர் அருட்பெருந்தகை டி. பால் அருள்சாமி அவர்கள் பொது நிலையினர், திருப்பணியாளர்கள் புடை சூழ திருநிலை படுத்தியது இவரது காலத்தில் தான். ஆலய அரும்பொனிக்கு மேற்றிராசனம் கொடுத்த தொகையுடன் திருவாளர்கள் இராயப்பிள்ளை, சாந்தப்பிள்ளை மற்றும் பங்கு மக்கள் வழங்கிய பொருளுதவியோடு, குடந்தை, புனித மரியன்னை தொழிற்பயிற்சிப் பள்ளி முன்னாள் நிர்வாகி அருட்தந்தை. ஏ. இராயப்பசுவாமிகள் தாமாகவே மனமுவந்து அளித்த நன்கொடையுடன் ஒப்பந்தக்காரர் உபகாரம் பிள்ளையால் இவ்வாலயம் சிறப்புறக் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் காலத்தில் தான் இங்கு நகரத் தந்தை என்ற பெருமையோடு இன்றும் அழைக்க பெரும் திரு. பொ. அழகேசநாயுடு அவர்கள் மெர்குரி விளக்கு வழங்கியதோடு, இதற்காகும் மின் செலவினையும் பஞ்சாயத்து ஏற்கும்படி செய்தார். கல்லக்குடி அந்தோனி முத்து உடையார் சிலுவைப் பாதைகளைக் சித்தரிக்கும் சுரூபங்களை வாங்கிக் கொடுத்தார். தமிழில் புதிய பலிபீடத் திருப்பலி முறையை இவர் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அடிகளார் அவர்கள் 1962 முதல் 1965 வரை 3 ஆண்டு காலம் பெரம்பலூர் பங்கிற்கு மிகப்பெரும் சேவையை ஆற்றினார். பின்னர் குடந்தை ஆயருக்கு அடுத்த நிலையில் முதன்மை குருவாக பணியாற்றினார்.
02.02.1965 ஆம் ஆண்டு அருட்திரு. எம். எஸ். மரியதாஸ் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். இவர் முத்தமிழ் வித்தகர், தத்துவம் பயின்றவர். இலக்கியக் கடல்; காவியம் பலகண்ட கவிஞர்; கன்னித் தமிழை பனிமய அன்னையின் வடிவிலும், புனித மரியாளைத் தமிழன்னையாகவும் கண்டவர். ஏழை எளியவருக்கு இறங்கும் குணம் உடையவர். புத்துலக வழிகாட்டி மறுமலர்ச்சி தந்தை. "பனிமாதா பதிப்பகம்" என்ற பெயரில் நூல் பல வெளியிட்டவர். கவிஞர் திரு. அமலன் அவர்களின் அரிய நட்பே அடிகளாரின் அளவிடற்கரிய இலக்கியப் பணிகளுக்கும், இனிய நற்செய்திகளுக்கும் உதவியதாக வரலாறு சான்று பகரும். இவர் காலத்தில் 20.03.1966 ஆம் ஆண்டு மரியாவின் சேனை ஆரம்பிக்கப்பட்டது. பின்பு பல பங்குகளுக்கும் பரவலாக்கப்பட்டது. அனைத்து பங்கு மரியாதையின் சேனைகளைக் கண்காணிக்கும் பொறுப்பினை, ஆசிரியர் திரு. டி. பி. சவரிமுத்து பிள்ளை ஏற்றார். பின் நாட்களில் அந்தப் பணியினை பாளையம் பவுல் தாஸ் ஆசிரியர் அவர்கள் ஏற்று வழி நடத்தினார்.
18.12.1966 ஆம் ஆண்டு கத்தோலிக்க சங்க முதல் ஆண்டு விழாவை நடத்தினார். 26.02.1967 ஆம் ஆண்டு கத்தோலிக்க இலக்கிய விழாவை நடத்தினார். 21.10.1967 ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னும் என்ற புதுமை கண்காட்சி நடத்தப்பட்டது. 28.02.1971 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் இலக்கிய விழாவில் அரிதான கவிதை பட்டிமன்றம் இங்கு நடத்தப்பட்டது.
12.03.1967 ஆம் ஆண்டு திருத்தந்தையின் பிரதிநிதி பேரருட்திரு. ஜேம்ஸ் ராபர்ட் நாக்ஸ் ஆண்டகை அவர்கள் மிகவும் சிறப்பாக வரவேற்கப்பட ஏற்பாடுகள் செய்தார்.
பெரம்பலூர் ஏரிக்கரை தென்புறம் இருந்து விளாமுத்தூர் வரை நல்ல சாலை அமைத்தார். கோயில் நிலங்களை திருத்தி, இரு கிணறுகள் வெட்டி வருவாய் பெருகச் செய்தார். 16.02.1969 ஆம் ஆண்டு பங்கு ஏற்படுத்தப்பட்டு 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழா மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. அன்றுதான் அழகிய புதிய பலிபீடம் மேதகு ஆயர் டி. பால் அருள்சாமி ஆண்டகை அவர்களால் திருநிலை படுத்தப்பட்டது. திருப்பலி நடத்தும் பீடத்தைச் சுற்றிலும் உள்ள இடங்கள் "மொசைக்" தரையாக மாற்றப்பட்டது. அருட்திரு. எம். எஸ். மரியதாஸ் அடிகளார் பெரம்பலூர் பங்கில் ஆறு ஆண்டுகள் பணியாற்றி 14.08.1971 ஆம் ஆண்டு ஏலாக்குறிச்சி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார். இவர் பணியாற்றிய இந்த ஆறு ஆண்டுகள் பொற்காலமாக பார்க்கப்பட்டது.
இவரை தொடர்ந்து அருட்திரு. ஜான் ஆப்தகிராஸ் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு குருவாக பொறுப்பேற்றார். இவர் குருவானவர் இல்லத்தின் உணவு அறையை விரிவு படுத்தினார். பின்னர் கே. எம். எஸ். எஸ். எஸ்., உதவியுடன் ஏரிக்கரை சாலையை சீர்த்திருத்தம் செய்தார். இவர் ஓர் ஆண்டுகாலம் மட்டுமே பெரம்பலூர் பங்கில் பணியாற்றி மாற்றலாகிச் சென்றார்.
16.09.1972 ஆம் ஆண்டு அருட்திரு. எஸ். ஆபிரகாம்நாதர் அடிகளார் அவர்கள் பெரம்பலூர் பங்கின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் தான், 18 இல்லங்களும், 18 கடைகளும் கட்டப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பனிமாதா மக்கள் மன்றம் இவர் காலத்தில் கட்டப்பட்டது. திருத்தந்தை அவர்களின் செயலார் காட்டினல் சைமன் லூர்து ஆண்டகை அவர்கள் சேலம் வழியாக முதன் முதலாக பெரம்பலூர் பங்கிற்கு வருகை தந்து, குடந்தை சென்றது இவரது முயற்சியால் தான். இவருக்கும் கவிஞர் அமலன் துணையாக நின்றது குறித்து செய்திகள் கிடைக்கிறது.
அடிகளாரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காது இறையடி சேர்ந்தார். அன்னாரின் உடல் குடந்தை மேற்றிராசன கோயிலுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. பெரம்பலூர் பங்கில் பணியாற்றும் காலத்தே மறைந்த முதல் குரு இவரே! மக்கள் அவர் மீது கொண்ட பற்றால் 40 நாட்கள் துக்கம் அனுசரித்து அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
22.12.1977 ஆம் ஆண்டு அருட்திரு. ஏ. அருள்நாதன் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு பங்குத்தந்தையாக பொறுப்பினை ஏற்றார். இவர் பெயருக்கு ஏற்றார் போல் அருள் உள்ளம் கொண்டவர். ஆன்மீக நெறியாளர், அனைவரிடமும் அன்பாக பழகியவர். பூண்டிப் பங்குத் தந்தை அருட்திரு. எ. இராயப்பன் அவர்கள் தாமாகவே முன்வந்து இலவசமாக அளித்த கொடி மரத்திற்கு அடித்தளம் அமைத்தார். பின்பு கோயிலின் இருபுற சுவர்களின் மேலே வெப்பக் காற்று வெளியேற வென்டிலேட்டர் அமைத்தார். இவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பெரம்பலூர் பங்கில் பணியாற்றி 1979 ல் மாற்றலாகி சென்றார்.
இவரைத் தொடர்ந்து அருட்திரு. எஸ். ஐசக்நாதர் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவர் உடல்நலம் குன்றிய நிலையில் என்புருக்கி நோயாளும் இளைப்பிருமல் நோயாலும் மிகவும் இடறுற்றார். புள்ளம்பாடி சகாய மாதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறையடி சேர்ந்தார். இப்பங்கில் பணியாற்றும் காலத்தில் மறைந்த இரண்டாவது குரு இவராவர்.
1980ல் அருட்திரு. ஜி. மரிய அல்போன்ஸ் அடிகள் பெரம்பலூர் பங்கிற்கு பங்கு தந்தையாக பொறுப்பேற்றார். இவர் பணிமய அன்னையின் புகழை உலகிற்கு உணர்த்தினார். பனிமாதா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்ட பெருமை இவருக்குண்டு. இவர் அருட்திரு. அருள்நாதர் அடிகளார் அவர்கள் அடித்தளம் அமைத்திருந்த கொடி மரத்தை 03.08.1980 ல் நிலைநிறுத்தி அப்பீடத்தில் புனிதர்கள் அந்தோனியார், செபஸ்தியார் திருவுருவங்களை நிறுவி வார வழிபாடு செய்வித்து எல்லாச் சமயத்தினரும் இறையருள் பெற வழி செய்தார். பனிமாதாவிற்கு நவநாள் ஆரம்பித்து உலகெங்கும் பக்தி முயற்சி பெருக வழி வகுத்தார். பாரத நாட்டின் பல்வேறு பகுதியினர் பனிமய அன்னையின் அருளைப் பெற வந்து குவிந்தனர். வெளிநாடுகளில் என்றும் வேண்டுதல்களும் நன்றியறிதல்களும் நாளும் வந்த வண்ணம் இருந்தன. அன்னைக்கு வந்த காணிக்கைகள் அளவிடற்கரியன. இவர் 1984 ல் பெருங்காவலூர் பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்
1984 ஆம் ஆண்டு அருட்திரு ஏ சாந்தப்பநாதர் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு பங்கு குழுவாக நியமிக்கப்பட்டார். பங்கின் பொருளாதார வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டார். பனிமாதா குடியிருப்பு இல்லங்களிலும், கடைகளிலும் உள்ளவர்களில் சரிவர வாடகை கொடுக்காதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை வாடகைக்கு அமர்த்தினார். பங்கிற்கு வருவாய் கிடைக்க சற்று வாடகையை உயர்த்தினார். பலிபீடச் சுவருக்கு மெருகேற்றி வண்ணம் பூசினார். 1987 ல் கோவண்டா குறிச்சி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.
22.07.1987 ஆம் ஆண்டு அருட்திரு எஸ் அகஸ்டின் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவர் உளவியல் பட்டம் பெற்றவர். எழுத்தாற்றல், இசையாற்றல், பேச்சாற்றல், மிக்கவர் நாடக விற்பனர் - மொத்தத்தில் முத்தமிழ் கலைஞர். இவரது காலத்தில் மாணவியர்களுக்கு வகுப்பில் மறைக்கல்வி தந்து குடந்தை மறை மாவட்டத்தில் பெரம்பலூர் முதலிடம் பெறச் செய்தார். பனிமய அன்னைக் காட்சி தந்த இடமாம் எஸ்குலின் குன்றின் பெயரால், எஸ்குலின் நாட்டிய பள்ளி தொடங்கி, பரத கலக்கி புத்துயிர் ஊட்டினார். இளைஞர்கள் பலர் இசைக்கருவிகள் பல இயக்கம் வாய்ப்பினை ஏற்படுத்தினார். நாடகத்தால் ஆன்மீக கருத்தினை உணர்த்தினார். இராக்கால செப வழிபாடுகள் நடைபெற செய்தார். வீட்டுக்கு ஒரு விவிலியம் என்பதற்கு பதிலாக ஆளுக்கு ஒரு விவிலியம் அளித்தார். கோயிலில் - குழல் விளக்குகளும், சரவிளக்குகளும், மின்விசிறிகளும் அமைத்தார். நவீன ஒலிபெருக்கி சாதனங்கள், ஆலய திருப்பலி உடுப்புகள் வாங்கி வைத்தார். குருவானவர் இல்லத்தை வசதிக்கேற்ப விரிவு படுத்தினார். பொது நிகழ்ச்சிகளுக்கென குருவானவர் இல்லம் முன்பு கலை மேடை அமைத்தார். பங்கு பேரவை அமைத்து பொருளாளர் பொறுப்பை பேரவையிடம் ஒப்படைத்தார்.
குடியிருப்பு இல்லங்களுக்கு நீர் வசதி, கழிவுநீர் வசதி செய்தவர் இவர். ஆழ்துளை கிணறு அமைத்தார். பனிமாதா திருவிழாவிற்காக ஊர்வலத்தேரினை சின்னையன் என்கிற சகாயராஜ் அவர்களின் உதவியுடன் தயார் செய்தார். பிற சமயத்தார் பெரும்பான்மை உள்ள பெரம்பலூர் பங்கைச் சேர்ந்த பேரழி கிராமத்து கோவிலை விரிவுபடுத்தி, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களுடன் திருப்பலி நிறைவேற்றி, திருவிழா கொண்டாடச் செய்தார். பங்கு மக்களுக்கு தம் நினைவு நெஞ்சில் நிலைக்கும் வண்ணம் ஆலயத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் தாமரை மலர் போன்ற தண்டில் உலக உருண்டைக்குள் அன்னை அருள் வழங்குவது போன்று 'கெபி' அமைத்தார். பனிமையா அன்னைக்கு வெள்ளியால் செய்த தங்க முலாம் பூசப்பட்ட திருமுடி சூட்டினார். 'எஸ்குலின் கலை தொடர்பகம்' அமைத்து ஒலி, ஒளி நாடகங்கள் மூலமும் கலைத் தொடர்பகத்தின் வாயிலாகவும் அருமறைப் பரப்ப ஆவல் கொண்ட அடிகளாரின் கனவுகள் நனவாகும் முன்னரே பெரம்பலூர் பங்கு, மறைவட்டத்தின் முதன்மை பங்காக உயர்ந்ததால் 05.09.1991 ஆம் ஆண்டு மாற்றலாகி குடந்தை மரியன்னை தொழிற்பயிற்சி பள்ளியின் முழு பொறுப்பினை ஏற்றார். இவருக்கு இயேசு சபையை சார்ந்த அருட்திரு. யாகு அடிகளார் சில நாட்கள் உதவி பங்கு தந்தையாக செயல்பட்டு வந்தார். அருட்திரு. எஸ். அகஸ்டின் அடிகளார் பணியாற்றிய இந்த நான்கு ஆண்டு காலம் பெரம்பலூர் பங்கின் வரலாற்றில் 'நவீன மயக்காலம்' என்றே இயம்பலாம்.
06.03.1991 ஆம் ஆண்டு பேரருள் பணி எஸ் மரியதாஸ் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். இவர் பெரம்பலூர் மறை வட்டத்தின் முதல் மறைவட்ட குரு ஆவார். இவர் ஆற்றிய சிறப்பு பணிகள் ஆன்மீக மறுமலர்ச்சி, பொன்விழா நினைவாகப் பாத்திமா பள்ளிக்கு மேல்மாடி கட்டிடம் கட்டினார். குருவானவர் தங்கும் இல்லத்தை விரிவாக்கம் செய்தார். கவினுறு கலை அரங்கம் அமைத்தார். ஆலயத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைப் போக்க ஜெர்மனி அன்பர் திரு. அ. செல்வம் அவர்களின் அருங்கொடைப் பயனாய் 5 கே. வி. ஜெனரேட்டர் ஒன்றைச் சிறப்பாக அமைத்தார். 20 பெண்களுக்கான செயற்கை வைரம் தீட்டும் பணி கனரா வங்கி உதவியுடன் தொடங்கினார். கோயிலுக்குச் சொந்தமான கல்லறை இடத்தை அன்பு வழியில் மீட்டார். ஞாயிறு தோறும் கவுல்பாளையம் கிராமத்தில் திருப்பலி சிறப்பாக நடைபெற்ற ஏற்பாடு செய்தார். மக்களின் அரும்பிணி போக்க சிறந்ததோர் மருத்துவமனை அமைத்தார். ஏழை எளிய மாணவர்கள் 25 பேர் இருந்து பயில இலவச தங்குமிடம் மற்றும் சிறப்புமிக்க திருமண மண்டபம் அமைத்தார். பொன் விழா மலர் வெளியீடு மற்றும் பொன் விழா நினைவாக அன்னைக்கு பொன்முடி சூட்டினார். அன்னையின் பேராலய முற்றில் 'கல்விக் காவலர்' பெரம்பலூர் ரோவர் கே. வரதராஜன் ஜான் அவர்களின் உதவியுடன் திருமண்டபம் நிறுவியது பொன்விழா ஆண்டிற்கு பொலிவூட்டுவதாக அமைந்தது. ஆறு ஆண்டுகள் பெரம்பலூர் பங்கில் பணியாற்றி பின்பு 21.08.1997 அன்று பணியிடை மாற்றல் ஆனார்.
21.08.1997 ஆம் ஆண்டு பேரருள் பணி எஸ். சூசை அடிகளார் பெரம்பலூர் பங்கின் முதன்மை குருவாக பொறுப்பேற்றார். இவர் பணி மாதா குடியிருப்புகளுக்கு வாடகை வீடுகளுக்கு ஆறு தண்ணீர் குழாய்கள் அமைத்தார். ஆலயக்குடியிருப்புகளுக்கு சொந்தமான சில வீடுகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். பெரம்பலூர் பங்கில் பணியை செய்யும் பொழுது இவர் வாகன விபத்துக்குள்ளானார். பின்பு 1999 ஆம் ஆண்டு பணியிடை மாற்றலானார்.
இவரைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு அருள் பணி சி. மரிய ஜோசப் அடிகளார் பெரம்பலூர் பங்கின் முதன்மை குருவாக பொறுப்பேற்றார். இவர் காலத்தில் திவ்ய நற்கருணை சுற்றுப்புறகாரம் முதன்முறையாக பெரம்பலூர் நகர சாலைகளில் நமது முன்னாள் ஆயர் மேதகுப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது. இவர் 6 ஆண்டுகள் பெரம்பலூர் பங்கில் பணியாற்றி 2005 ஆம் ஆண்டு பணியிடை மாற்றலாகி சென்றார்.
பிறகு 2005 ஆம் ஆண்டு அருள் பணி. என். அருள்சாமி அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு முதன்மை குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காலத்தில் நமது லூர்து அன்னை கெபி 03.02.2007 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகள் பெரம்பலூர் பங்கில் பணியாற்றி 03.06.2009 ஆம் ஆண்டு பணியிடை மாற்றலாகி சென்றார். பின்னர் அருள் பணி பி. அந்தோணிசாமி அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு முதன்மை குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தூத்துக்குடியில் இருந்து நமது ஆலயத்திற்கு புதிய பனிமய மாதா சுரூபம் கொண்டு வந்து நிறுவப்பட்டது. இவர் மூன்று ஆண்டுகள் நமது பங்கில் பணியாற்றி 23.03.2012 அன்று பணியிடை மாற்றலாகி சென்றார்.
பிறகு 01.05.2012 ஆம் ஆண்டு அருள் பணி. ஐ. அடைக்கல சாமி அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு முதன்மை குருவாக பொறுப்பேற்றார். இவர் ஆற்றிய சிறப்பு பணிகள் நமது ஆலயத்தை 29.04.2018 ஆம் ஆண்டு புதுப்பித்தார். ஆலயத்தின் வலப்புற பகுதியை விரிவாக்கம் செய்தார். இவர் நமது திருத்தளத்தில் முன்னாள் பங்கு தந்தை அருட்திரு. மரியதாஸ் அடிகளார் காலத்தில் உதவி பங்கு தந்தையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு 09.06.2018 ஆம் ஆண்டு பணியிடை மாற்றலாகி சென்றார்.
பிறகு 10.06.2018 ஆம் ஆண்டு அருள் பணி. ஆ. இரசமாணிக்கம் அடிகளார் பெரம்பலூர் பங்கிற்கு முதன்மை குருவாக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் பெரம்பலூர் பங்கில் ஆற்றிய பணிகள். ஆலயப் பீடத்தின் வலப்புறம் அமைந்துள்ள extention பகுதி வேலை முழுமையாக முடிக்கப்பட்டு இவரால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலயச் சுற்றுச்சுவர் எழுப்பி புதிய கதவு அமைத்து நுழைவாயில் பகுதியின் இடப் புறத்தில காவல் தூதர்களை நிறுவினார். -நமது திருத்தலத்தில் அருட்பொருளகம், அருட் பயிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கான இடம் புதுப்பிக்கப்பட்டது. ஆலய வழிபாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாக திருவழிபாட்டு செபங்கள் மற்றும் பாடல்கள் போன்றவை display 30 inch TV மற்றும் கணினி ஆலயத்திற்கென புதிதாக வாங்கப்பட்டு வாரந்தோறும் திருப்பலி மற்றும் விழா நாட்களிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. பனிமய மாதா வெப்சைட் ஆரம்பிக்கப்பட்டது. பனிமய மாதா முகநூல் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு பங்கின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பனிமய அன்னையின் பெருமையை உலகறியச் செய்தவர். ஆலயத்தின் நுழைவாயிலில் இரக்கத்தின் ஆண்டவர் கெபி மற்றும் புனித பனிமய மாதா கெபி அமைக்கப்பட்டது. ஆலயத்தின் நுழைவாயில் வெளிப்புறத்தில் புனித அந்தோணியார் கெபி மற்றும் புனித செபஸ்தியார் கெபி நிறுவப்பட்டது. ஆலயத்திற்குப் புதிய கீ போர்டு , மற்றும் நேரடி ஒளிபரப்பு லைவ் நிகழ்வுக்குத் தேவையான லேப்டாப், புரோஜக்டர், கேமரா, டேப் வாங்கப்பட்டது. ஆலயத்தின் மேல் ஒவ்வொரு மணி தோறும் இறை வார்த்தை ஒலிக்கும் அலாரம் அமைக்கப்பட்டது. ஆலயத்தின் கல்லறைத் தோட்டச் சுற்றுச்சுவர் புதிதாகக் கட்டப்பட்டது. புதிய கொடி கம்பம் ( s.s. silvers and Brass) 53 அடி உயர அளவில் கட்டப்பட்டது, அதனைத் தொடர்ந்து புதிய கொடி, புனித பனிமய மாதா புகழைப் போற்றிப் புதிய கொடிப் பாடல் பங்குத் தந்தை அவர்களால் எழுதி இசை அமைக்கப்பட்டுக் குடந்தை மறைமாவட்டத்தின் ஆயர். மேதகு.ஜீவானந்தம் அவர்களால் வெளியிடப்பட்டது. ஆலய வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளமானது ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு . வரதராஜன் அவர்களின் பேருதவியால் பதிக்கப்பட்டது. பங்கு அலுவலகத்தில் கணினி அமைக்கப்பட்டது. மாதா கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. பங்குத் தந்தை இல்லத்தின் பின்புறம் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டது.
மேலும் பங்குத்தந்தையின் இல்லத்தில் வண்ணத் தளக் கற்களாலான தளம் அமைக்கப்பட்டது. R.C பாத்திமா தொடக்கப்பள்ளியின் வளாகம் சிமெண்ட் தளமாக்கப்பட்டது.பள்ளியில் சுற்றுச்சுவர் எழுப்பிக் கதவு அமைக்கப்பட்டது. ஆலய வழிபாட்டில், ஞாயிறு தோறும் மாலைத் திருப்பலி, முதல் ஞாயிறு தோறும் சிறுவர் திருப்பலி, இரண்டாவது ஞாயிறு தோறும் ஆங்கிலத் திருப்பலி, நான்காவது சனி தோறும் குணமளிக்கும் செபக்கூட்டம். மற்றும் திங்கள், வெள்ளி, ஞாயிறு நீங்கலாக மற்ற நாட்களில் நவநாள் திருப்பலிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய நவநாட்களுக்கான நவநாள் செப அட்டைகள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு நவநாளுக்கும் ஒவ்வொரு நபர் இனிப்பு உபயம் செய்திட ஏற்றுக் கொண்டது சிறப்பு மிக்கது. ஆலயத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான திருமணத் தம்பதியர் இருக்கை, பாடகர், குழு பீரோ, ஒலி வாங்கி, ஆலயத்தைச் சுற்றிலும் மின் விளக்குகள், ஆலயத்தினுள் மின் விசிறிகள், CC TV கேமராக்கள், தரை விரிப்புகள், சிலுவை, ஆலய முகப்பில் ஆலயத்தின் SS உலோகப் பெயர்ப் பலகை, நான்கு வகையான இருக்கைகள், அமரர் ஊர்தி அறை, Digital Screen, கணினிகள், மேசைகள், நாற்காலிகள், ஆகிய அனைத்தும் வாங்கப்பட்டு ஆலயம் புதுப் பொலிவோடு விளங்கக் காரணமாக அமைந்தது. கிளைக்கிராமம் கவுல்பாளையத்தில் ஒவ்வொரு மாதத்தின் 3-வது செவ்வாய் தோறும் புனித பதுவை அந்தோணியார் நவநாள் மற்றும் தேர்த் திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது.
பங்கு அளவிலான வாட்சப் (புலனம்) குழுக்களானப் பனிமய மாதா திருத்தலக் குழு, ஆங்கிலத் திருப்பலிக் குழு, பனிமய மாதா பாடகர் குழு, பங்குப் பேரவைக் குழு என்று நான்கு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுப் பங்கின் வழிபாட்டு நிகழ்வுகளின் விவரங்கள், நேரம், முக்கிய அறிவிப்புகள், முக்கிய செயல்பாடுகள் அனைத்தும் இறைமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வார நவநாள் திருப்பலிக்காகப் புனித அந்தோணியார், புனித சூசையப்பர், அற்புதக் குழந்தை இயேசு திருச்சுரூபங்கள் புதிதாக வாங்கப்பட்டன. முதல் சனிக்கிழமை புனித பனிமய மாதா நவநாள் தேர் பவனிக்கான நவநாள் தேர், மற்றும் ஆலயத்தில் உள்ளே நவநாளுக்கான தேர் என்று இரண்டு தேர்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை வழிபாடு புனித பனிமய அன்னையின் நவநாளோடு இணைந்த ஆடம்பரத் திருப்பலியாகக் கொண்டாடப்படுகிறது. ஆலய முகப்பில் கிளைக்கிராமம் பேரளியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் உள்ள சுரூபம் புதுப்பிக்கப்பட்டு ஆண்டுக்கு இருமுறை வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் இரண்டு கிளைக் கிராமங்களிலும் இறைவார்த்தை அலாரம் அமைக்கப்பட்டது. நம் மறைமாவட்டத்திற்குப் புதிதாக குருவாகிட சகோதரர் ஆல்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுக் குரு மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 16.06.2024 ஆம் ஆண்டு பணியிடை மாற்றலாகி சென்றார்.